வெளியூர் வாழ்க்கை

வாழ்க்கை!!!

நமது அழுகையில் தொடங்கி

நமக்கான அழுகையில் நிறைவுறும்

ஒரு அழுக்காட்சி நாடகம்…

இடைப்பட்ட காலத்தில் உதடுகளை

புன்னகை பூக்களை உதிர்க்க மட்டுமே

உபயோகிக்க எண்ணும்

சாதாரண மனிதர் கூட்டம்…

ஆம் … நானும் அதில் ஒருவன் தான்!!!

 

புன்னகை என்ற புத்தக தேடலில்

அதிகம் கண்டது என்னவோ

Out of Stock வாசகம் மட்டுமே…

ஒரு சில பொருட்கள்

இருக்கும் இடம் தெரிந்தும்

வாங்க இயலாதோர் வரிசையில் நான்…

பெறுவதில் தெரியா அருமை

பிரிவதில் கற்றுக்கொள்ளும் வகை நாம்

இது பொருட்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல….

 

ஓர் அழகிய கிராமம்!!!

அன்பின் அரவணைப்பில் மட்டுமே நிற்கும்

நிலை குலைந்த ஒரு வீடு…

நகைகளுக்கு பஞ்சம் இருந்த போதும்

புன்னகைக்கு அது ஒருபோதும் வந்ததில்லை….

அந்த சொர்க்கத்தில்

துயில் கண்களை தழுவும் போதும்

இமைகள் துயிலை விடுதலை செய்யும் போதும்

கவலை என்கிற கயவன் கட்டாயம் கொல்லப்பட்டிருப்பான்…

சிரித்து மட்டுமே கலங்கிய கண்கள்…

வெற்று திண்ணையில் சாயும் போது

ஏதோ சாதித்ததாய் எண்ணும் மனது…

உறவுகள் எண்ணும் உளியால்

சிற்பமாக செதுக்கப்பட்டேன் நான்…

உறவுகள் மேன்மைப்பட வேண்டி

உறவுகள் தொலைத்த

ஓர் வெளியூர் வாழ்க்கை.

 

ஆம் ,

என் சந்தோசம் சற்று சாயம் போய்

தென்பட்ட காலம்

 

உழன்று விழும் போது

ஊன்றி எழும் கைகள் தவிர

ஆறுதல் சொல்ல கைகள் இல்லா ஓர் பயணம்…

தூங்கினால் கிடைபிணம்

எழுந்தால் நடைபிணம்…

தேகத்தில் தென்றல் தீண்டாத போதும்

எட்டிப்பார்க்காத வியர்வை

இங்கே காற்றடித்தும் நிற்கவில்லை…

அழுக்காய் திரிந்தாலும் அரவணைக்கும் கரங்கள் மத்தியில்

இங்கே பரவாயில்லை என்ற போதும்

அதை பொருட்படுத்த ஆளில்லை…

இக்கரைக்கு அக்கரை பச்சை போல்

மனிதனுக்கு ஏற்படும் சாதாரண எண்ணம் தான்

இதற்கு காரணமா???

இல்லை…

ஏனெனில்,

 

அந்த கருவறையில் இதுவரை

கவலை எட்டிப்பார்த்ததில்லை…

ஐம்புலன்களில் ,

கண்களை பார்த்து செவிகள் சிரிக்கின்றன

இரவு தொலைபேசியில் உறவுகளுடனான உரையாடலின் போது…

தினம் என்னை எழுப்பும் உற்சாகம் என்னும் ஊழியன்

ஏனோ சொல்லாமல் விடுமுறை எடுத்து கொள்கிறான்…

வயிற்றின் வாசற்படியில் அன்னமவள் படாவிடில்

கவலைப்பட்டே கால்வாசி நாளை கழிக்கும் பாசம்

வயிறானது வானம் பார்க்காத பூமி போல்

வறண்டு கிடந்தும் கேட்க ஆளில்லை

பொய் என்ற வண்ண முலாம் பூசப்படுவதால்

ஓடி ஓடி அசந்து போன கால்கள் – இன்று

அசைவதற்கும் அசந்து போய் கிடக்கிறது…

போதவில்லை என்றிருந்த நேரம் – இன்று

போகவில்லை என்றாகி விட்டது…

உறவு ஒன்று புதிதாய் உருவாகும் போது

சந்தோச கண்ணீர் விடவும்

இருக்கும் உறவின் இழப்பில்

கண்ணீர் விட்டு கதறி அழுகவும்

அரை நாள் கால அவகாசம் தேவைப்படுகிறது

விடுமுறை என்று வாங்கி செல்லும் போது

நன்றாக இருக்கின்றாயா

என்ற கேள்வியின்  பாசம் செரிப்பதற்குள்

பாத்து இரு

என்ற வேண்டுகோள் எட்டிப்பார்த்து விடுகிறது

 

என்ன செய்வது என்பதறியாததால்

எண்ணக்குமுறல்கள் யாவும்

நடுக்கடலில் ராட்சச அலைகள் போல்

ஆவேசமாய் எழுந்து பின்

யாருக்கும் தெரியாமல் அடங்கி போய்விடுகிறது

 

இந்த வெளியூர் வாழ்கை பயணத்தில்

வேகம் என்ற வண்டியில்

சந்தோச தேடல் என்ற எரிபொருள் கொண்டு

மரணம் என்ற ஏதோ ஒரு புள்ளியை நோக்கி

பயணப்படுகையில்

இடையிடையே எனை தாமதப்படுத்தும்

வேகத்தடை மேடுகளாய் – சில

சகோதர சகோதரிகளும்

தோழர் தோழிகளும்

எனது நலம் விரும்பிகளும்!!!

Advertisements

இயற்கையின் இசை

அழகிய மாலை பொழுது

மனதை வருடும் பாடல்கள்

கால்கள் வருந்தாமல் ஒரு நடைபயிற்சி!!!

ஏதோ ஒரு காரணம் கொண்டு

செவிகளை அடைத்து ஒலித்து கொண்டிருந்த

பாடல் கேட்கும் கருவியை அகற்றினேன்.

மெய்மறந்து நின்றேன் ஒரு நிமிடம்!!!

மெல்லிசை கேட்க வேண்டி

காதுகளை அடைத்து கொண்ட எனக்கு

பல்லிசை கேட்க துவங்கியது…

இயற்கையை விட இதம்

வேறெந்த செயற்கையிலும் வராது என புரிந்து கொண்டேன்.

 

தனக்கே உரிய ரீங்காரத்துடன்

ஊர்ந்து சென்ற உந்துகள்

தடைகள் வரும் போது

இடையிடையே எழும்பிய ஒலிப்பான் ஓசைகள்

தாயிடம் தர்க்கம் செய்து

உணவு உண்ணாமல் அழுது கொண்டிருந்த

மழலையின் செல்ல அழுகை

கவலைக்கு வாய்ப்பில்லாத

கன்னியர் கூட்டத்தின் சிரிப்பொலி ஓசை

மிதிவண்டியிலும் வாயிலும்

ஒலி எழுப்பிய படியே சென்ற

பள்ளி மாணவர் பட்டாளம்

எங்கோ ஓர் மூலையில்

மகிழ்ந்து உலாவி கொண்டிருந்த

பறவைகளின் தேசிய கீதங்கள்

ஏதோ ஓர் வீட்டில்

சம்பள பாக்கி கொண்ட வேலைக்காரி

பாத்திரங்கள் மீது காட்டிய கோப தீண்டல்கள்

விற்று விடுவோம் என்ற நம்பிக்கையில்

தள்ளு வண்டி கடைகாரர் எழுப்பிய

தொடர்ச்சியான சத்தங்கள்

மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்த

தொழுகைகளும் பிரார்த்தனைகளும்

இரைச்சலும் இசையென புரிந்து கொண்டேன்

ஐந்து நிமிட நடை பயணத்தில்

ஒலிகளில் ஓசைகளில் சங்கீதங்களில்

இத்தனை விதங்களா என்று வியந்து போனேன்

ஆம், இயற்கையே உன்னை விட

செவிகளுக்கு இதமளிக்க செயற்கையால் இயலாது என

உன்னை எண்ணி மெய் மறந்து போனேன்

செவிகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்!!

இயற்கை இசைக்கும் இன்னிசையை கேளுங்கள்!!!

அம்மா

தாயே நீயே!!! நீயே வாழ்வே!!!

நேரம் விற்று பாரம் ஏற்று

சந்தோசம் கையில் தந்தாயே

வெயில் என்னை தீண்டவில்லை

உன் முந்தானை குடை ஆனதே

கண்கள் இதுவரை அழுததில்லை

உன் கரங்கள் காவல் ஆனதே

என் கால்கள் செய்த தவறுக்கு

கல்லும் தண்டனை பெற்றதே

என் கண்ணில் விழுந்த தூசிக்கு

உன் கண்கள் கண்ணீர் சிந்தியதே

கேசம் உன் கைகள் வருடும் போது

தானாய் கண்ணை தூக்கம் தழுவுதே

உன் நிழலிலும் பாசம் கண்டேன்

என் கனவிலும் அதை மறவேனே…

 

எனக்காக மட்டுமே சோறுண்ட நீ

இன்று நான் புசிக்க பசி தழுவிக் கொள்கிறாய்

பேசும் விவரம் புரியாத போதும்

எனக்காக பரிந்து பேசி நழுவிக் கொள்கிறாய்

மறுபிறவி என்றிருந்தால் மீண்டும் மகனாய் வருவேன்

உன் பாசம் தன்னை பங்கின்றி நானே பெறுவேன்

மறுநொடி மரணம் வந்தால் கூட – வேண்டுகிறேன்

உன் மடி தன்னில் அதுவும் நிகழ்ந்திட!!!